சிரியாவில் ராணுவத்தினருக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே நடந்த சண்டையில் ஒரே நாளில் பொது மக்கள் உட்பட 180க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.
மேற்கு ஆசிய நாடான சிரியாவில் அதிபர் பஷார் அல் அஸாத்துக்கு எதிராக கிளர்ச்சி ஏற்பட்டுள்ளது. பல மாதங்களாக நீடிக்கும் போரில் அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் பலவற்றின் ஆதரவை பெற்றுள்ள அரசு எதிர்ப்புப் படையினரின் கை ஓங்கியுள்ளது. அவர்கள் இப்போது தலைநகர் டமாஸ்கஸில் புகுந்து தீவிர தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் டமாஸ்கஸில் மற்றும் நாட்டின் முக்கிய இடங்களில் இரு பிரிவினரிடையே ஏற்ப்பட்ட கடும் சண்டை பெரிதாக வெடித்துள்ளது. நேற்றைய தொழுகைக்குப்பின் ஏற்பட்ட மோதலில் மட்டும் சுமார் 180க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இவர்களில் அப்பாவி பொதுமக்கள் பலரும் அடங்குவர்.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் போரிட்டு வரும் எதிர்ப்புப் படையினர் விரைவில் ஒன்று திரண்டு, ஒட்டுமொத்தமாக டமாஸ்கஸை தாக்க இருக்கின்றனர். எனவே இன்னும் சில தினங்களில் சிரியாவில் அஸாத்தின் ஆதிக்கம் முற்றிலுமாக முடிவுக்குக் கொண்டு வரப்படும் என்று கிளர்ச்சியாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 17 மாதங்களாக நிகழ்ந்து வரும் உள்நாட்டுப் போரில் இதுவரை 23 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். எனவே அங்கு போர் நிறுத்தத்தை ஏற்படுத்தி அமைதியான வழியில் பிரச்னைக்கு தீர்வுகாணும் வகையில் ரஷிய வெளியுறவுத் துறை அதிகாரிகளுடன் அமெரிக்க வெளியுறவுத் துறையினர் பேச்சு நடத்தி வருகின்றனர்.
அதே நேரத்தில் சிரியாவில் கிளர்ச்சியாளர்களுக்கு பல்வேறு வகையில் உதவி செய்து அமெரிக்காதான் அங்கு வன்முறையைத் தூண்டி வருகிறது என்று ரஷ்யா குற்றம்சாட்டியுள்ளது. சிரியாவின் அமைதி முயற்சி தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள ஐ.நா. கண்காணிப்புக் குழுவுக்கு ஆதரவு தெரிவிக்கவும் ரஷ்யா மறுத்துள்ளது.


















